அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் கிறிஸ் இவன்ஸ் இலங்கை வரும் குழுவுக்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடல் மார்க்கமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த குழு இலங்கை வருகிறது.
ஏனெனில், சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு நுழைய முற்பட்ட போது அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் இலங்கையர்கள் பலரும் இருக்கின்றனர்.
இவர்கள் பற்றியும் இவ்வாறான சட்டவிரோத முயற்சிகளை தடுப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் பொருட்டே அவுஸ்திரேலியாவின் உயர்மட்டக் குழு கொழும்பு வரவிருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை மறுதினம் புதன்கிழமை மாலை இலங்கை வரும் இக் குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம உட்பட விடயத்துடன் தொடர்புடைய உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரையும் சந்தித்து பேசவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேநேரம் அவுஸ்திரேலிய தூதுக்குழு இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியா செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. |