சிறீலங்காவில் தோன்றியுள்ள ஜனநாயக விரோத சூழலில் தமிழ் சமூகமும் இணைந்து கொள்வதை நாம் அனுமதிக்க முடியாது. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவது ஒரு மனித இனத்தின் கௌரவமிக்க உரிமையாகும். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகள் என பல சவால்களுக்கு மத்தியில் தாயக்தில் இருந்து இயங்கிவரும் தமிழ் ஊடகம் ஒன்றின் மீதான இந்த அச்சுறுத்தல் எமது இனத்திற்கு வருங்காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம்.
இது தொடர்பில் நாம் திரு வித்தியாதரனை தொடர்பு கொண்ட போது, தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் தனது கவலைகளை வெளியிட்ட அவர் இது தொடர்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தாயகத்தில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தடுப்பதிலும், அரசியல் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களிலும் புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதும் அவரின் விருப்பமாகும்.
வித்தியாதரனுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ள கருத்துக்கள்:-
கலாநிதி ஆர். சேரன், துணை பேராசிரியர், சமூக விஞ்ஞானவியல் துறை, வின்சர் பல்கலைக்கழகம், கனடா.
அரசியல்வாதிகள் ஊடகவியலாளரை மிரட்டுவதும் கொலை செய்வதும் நாட்டை விட்டு விரட்டுவதும் நமக்குப் புதிதல்ல. பொறுமையின்மையும் ஊடக சுதந்திரத்தை மதிக்காத மனோபாவமும் செய்தி தருபவரைச் சினந்துகொள்வதும், கொல்வதும் இலங்கையின் அரசியல் மரபாகி விட்டது.
எனினும் பல நெருக்கடிகள் இடர்ப்பாடுகள் அச்சுறுத்தல் மத்தியில் வெளிவருகிற உதயன் நாளிதழின் ஆசிரியர் வித்தியாதரனை சிவநாதன் கிசோர் மிரட்டியிருப்பது அநாகரிகமும் ஆபத்தும் நிறைந்த ஒரு செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிப்பது எல்லா ஊடகவியலாளரினதும் மனித உரிமைவாதிகளினதும் கடமையாகும்.
திரு பரணி கிருஷ்ணரஜனி, அரசியல் விமர்சகர், பெண்ணிய – உளவியல் ஆய்வாளார், DEPARTMENT OF FEMINISM AND GENDER STUDIES, UNIVERSITY OF PARIS:
கிசோரின் நடவடிக்கை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். உலகில் எந்த தேசமாயினும் எந்தக் கால கட்டமாயினும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதென்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் லசந்த தனது இறுதி மரண சாசனத்தில் எழுதியுள்ளது போல்,
மஸ்காராவும் ஸ்டைலிங் ஜெல்லும் இல்லாமல் தனது முகத்தைச் சமூகம் பார்க்கக்கூடிய ஒரு கண்ணாடியாகச் சுதந்திரமான ஊடகம் இருக்கிறது. சமயங்களில் நீங்கள் கண்ணாடியில் பார்ப்பது நல்ல சொரூபமாக இருக்காது. ஆனால் உங்கள் பாதுகாப்பான இருக்கைகளின் தனிமையில் நீங்கள் புலம்பும் போது, உங்களுக்கு அந்தக் கண்ணாடியைத் தூக்கிக்காட்டும் ஊடகவியலாளர்கள் அதை வெளிப்படையாகவும் பல ஆபத்துகளை எதிர் கொண்டவாறும் செய்கிறார்கள். இது அவர்ளுடைய கடமை, அதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை.” இது ஒரு பொதுவான ஊடக வியாக்கியானம்.
ஆனால் இன்றைய ஈழ அரசியற் களத்தில் ஒரு ஊடகத்தின் பணியின் கனதியை விளக்குவதற்கு அகராதியில் புதிதாக ஒரு வார்த்தையைத்தான்; தேட வேண்டும். ஒரு இனப்படுகொலையைச் சந்தித்து மரத்துப்போன, பேதலித்த கூட்டு உளவியலுக்குள் சிக்கி வெற்று மனிதர்களாகியிருக்கும் ஒரு மக்கள் சமூகத்தை வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்புக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கின்றன தாயகத்தைக் களமாகக் கொண்ட தமிழ் ஊடகங்கள்.
இந்த ஊடகங்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதென்பது அந்த ஊடகங்கள் மீதான வன்முறையாக அல்லாமல் அந்த மக்கள் சமூகத்தின் மீதான நேரடி வன்முறையாகவே பார்க்கப்படும். இந்த அடிப்படையில் நாம் எல்வோரும் ஒருமித்து இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
கலாநிதி ஆர் பிரபாகரன் (அருஷ்) படைத்துறை ஆய்வாளர், பிரித்தானியா:
சிறீலங்காவில் இருந்து வெளிவரும் உதயன், சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் திரு வித்தியாதரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கொலை அச்றுத்தலை விடுத்துள்ளது மிகவும் வேதனையானது.
கொலை அச்சுறுத்தல் வித்தியாதரனுக்கு மட்டுமல்ல சிறீலங்காவில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஒருவர் விடுத்துள்ளதை எண்ணும்போது தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நொந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறீலங்காவில் தோன்றிள்ள தற்போதைய நெருக்கடியான நிலையில் ஊடகத்துறை பாதுகாக்கப்படுவது அவசியமானது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் போன்ற தமது உரிமைகளுக்காக போராடும் இனத்திற்கு அதன் அவசியம் என்பது மிக முக்கியமானது.
ஒரு இனத்தின் ஜனநாயக நடைமுறைகள் என்பது அதன் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் ஊடாகவே வெளியுலகை சென்றடைகின்றது. எனவே எதனையும் நாம் வெளிப்படையாக தெரிவிப்பதற்கு உரிமையுள்ளவர்கள் ஆகவேண்டும். ஆனால் அதன் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் என்பது ஒரு ஜனநாயகப் படுகொலையாகவே பார்க்கப்படும்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்த செயலுக்கு எதிராக அனைவரும தமது கண்டணங்களை பதிவு செய்யவேண்டியது அவசியமானது. அதுவே வருகாலத்தில் ஒரு வளமாக சமூகமாக தமிழினத்தை மாற்றும்.
கிருஷ்ணா கலைச்செல்வன் அரசியல்-பாதுகாப்பு பத்தி எழுத்தாளர், லண்டன் பல்கலைக்கழக சர்வதேச பாதுகாப்பு கற்கை நெறி மாணவர், பிரித்தானியா.
ஸ்ரீலங்காவில் ஊடகங்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒன்றும் புதிய விடயமல்ல ஆனால் தற்போது உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக சிவநாதன் கிஷோர் பா உ இனால் விடப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலானது தமிழ் அரசியலில் உருவாகி வரும் ஒரு புதிய அபாயகரமான போக்கையே சுட்டி நிற்கின்றது.
அதாவது இயக்கப் பின்னணிகள் அற்ற ஓர் தமிழ் அரசியல்வாதியினால் இவ்வாறான மிரட்டல்கள் விடப்படுவது என்பது தமிழரசு கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி கால அரசியலை நினைவுபடுத்துவதாகவே காணப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைப்பீடம் இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையினை கிஷோர் பா உ க்கு எதிராக மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த இழிகரமான செயலானது அனைவரினாலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
உதயன் பத்திரிகையின் அரசியல் எமக்கு ஏற்புடையதாக இல்லாவிடினும்இ தற்போதைய அரசியல் சூழலில் ஈழத்தமிழர்களுக்கு தமிழ் தேசிய வரையறையில் நின்ற வண்ணம் செய்தி வழங்கும் ஓர் நிறுவனமாகவே நாம் உதயன் பத்திரிகையைப் பார்க்கின்றோம். அந்த வகையில் உதயனின் இருப்பும் பங்களிப்பும் தமிழ் தேசிய அரசியலுக்கு மிகவும் அவசியமானதாகும்.
பகீரதன், PEACE AND CONFLICT STUDIES, UNIVERSITY OF TORONTO, கனடா:
பொருளாதார சமுக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளில், கருத்துச் சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் சுதந்திர ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாயகத்தில் இயங்கும் சுதந்திரமான ஊடகங்கள், தங்களது கருத்துக்களை வெளியிடச் சுதந்திரம் இல்லாத மக்களின் குரலாக ஒலித்து வருகின்றன. அந்த நிலையில், அத்தகைய ஊடகங்களின் மீதான அச்சுறுத்தால்கள் அனைத்து மக்களின் மீதும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படவேண்டும்.
ஊடகங்களின் மீதான அச்சுறுத்தல்களை, ஊடகவியலாளர்களும், புத்திஜீவிகளும் மட்டுமின்றிச் சமுகத்தில் உள்ள அனைவரும் கண்டிக்கவேண்டும். சமுகத்தில் இருந்து எழும் பலமான எதிர்க்குரல் மட்டுந்தான், அடக்கு முறையில் சிக்கியுள்ள தமிழ் இனத்தின் குரலாய் ஒலிக்கும் சுதந்திர ஊடகங்களின் சுதந்திரத்தையும், அந்த மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்.
திரு. இதயச்சந்திரன், அரசியல் ஆய்வாளர், பிரித்தானியா:
தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் “உதயன்” “சுடரொளி” ஆசிரியர் ந. வித்தியாதரன் அவர்களைத் தொலைபேசியூடாக அச்சுறுத்திய விவகாரம் உண்மையானது என்பதை “தமிழ்வின்” இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல் உறுதிப்படுத்துகின்றது.
எப்போதோ தொலைந்திருக்க வேண்டிய நபராக வித்தியாதரனை நோக்கி சாபமிடுவது, ஜனநாயக பண்புகளின் மீது, கிசோருக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. பொதுவாழ்வில் இணைந்து, மக்கள் பிரதிநிதியாக வலம்வரும் ஒருவர், விமர்சனங்களை முகம்கொள்ளும் ஆளுமையைப் பெற்றிருக்க வேண்டும்.
ஊடகங்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் அதிகார இருப்புவாதிகள் போன்று, ஒடுக்கப்படும் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயங்க முடியாது.
கொழும்பு வீதி ஓரப்பற்றைக்குள் தாhகி சிவராம் என்கிற ஊடகப்பேராளி எழுத்துச்சமராடி தூக்கி வீசப்பட்டபோது, அடக்குமுறைக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் அனைத்துலக ஊடகங்கள் கொதித்தெழுந்தன.
சுருங்கிவிட்ட உலகத்தில், செய்திகள் பாய்ந்து செல்லும் வேகம், எழுத்தின் வலிமை கருத்தாக மாறி மக்களை பற்றிப் பிடித்துவிடுமென்கிற யதார்த்தத்தை உணர்த்துகின்றது.
ச. வி. கிருபாகரன், பொதுச் செயலாளர், தமிழர் மனிதர் உரிமைகள் மையம், பிரான்ஸ்:
பிரபல பத்திரிகையாளர் திரு வித்தியாதரனுக்கும், பாரளுமன்ற உறுப்பினர் திரு கிசோருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சர்சைகளை நாம் நன்கு அறிவோம். இவ்வேளையில் ‘உதயன்” ஆசிரியர் வித்தியாதரனால், தமிழர் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் கிசோர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானதும் மிக கவலைக்குரியதும்.
இந்நிலையில் பௌத்த சிங்கள இனவாதிகளின் 'பிரித்து ஆளும் தன்மைக்கும் கொள்கைக்கும் நாம் யாவரும் பிடிகொடுக்கமல்" பிரபால பத்திரிகையாளரையும், தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரையும் புண்படுத்தாது ஓர் அறிக்கையை வெளியிடுவது என்பது கடினமானது.
ஆகையால் பாரளுமன்ற உறுப்பினர் திரு கிசோர் பெருந்தன்மையுடன், மீண்டும் திரு வித்தியாதரனை தொலைபேசியில் அழைத்து, சர்சைக்கு முன்னர் இவர்கள் இருவரும் எப்படியாக உரையாடினார்களோ, அதேவிதமாக (உதாரணமாக) 'வித்தியாதரன் நடந்ததை மறவுங்கள், ஆத்திரத்தில் கூறக் கூடாதா வார்த்தைகளை கூறிவிட்டேன்............" என்று கூறினால், பத்திரிகை ஆசிரியர் என்ற அடிப்படையில் பல சர்ச்சைகளுக்கு முகம்கொடுக்கும் திரு வித்தியாதரனுக்கு, திரு கிசோரின் அன்பான தொலைபேசி அழைப்பு, நிச்சயம் ஆறுதலையும், அதே இடத்தில் இருவரின் புரிந்துணர்வுகளை பிறரும் மெச்சுவார்கள்.
இது பிரித்து ஆள விரும்புவோருக்கும், நரிபோல் பதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போருக்கும் கிடைத்த தோல்வியாகவும், தமிழரிடையே உள்ள சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும்.
இப்படியான சர்சைகள் இவர்களில் யாருக்கும் இனவாதிகளாலோ அல்லது ஒட்டுக் குழுக்களினாலோ ஏற்படுமானால் நாம் அதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒருபொழுதும் தயங்க மாட்டோம் என்பதை இச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறோம். |